ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்குக் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், அதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் விளையாட உள்ளது.
அதே வேளையில் இதில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற முடியும் என்பதால் இங்கிலாந்து அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும். இதனால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதில் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், 9 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட்டும் நல்ல நிலையில் உள்ளது.