தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 17-ம் தேதி வெளியிடுகிறார்.
இம்மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்றும். இம்மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தெலங்கானாவைப் பொறுத்தவரை பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், இம்மூன்று கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, வருகிற 17-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது, நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் அமித்ஷா, பா.ஜ.க.வின் மீடியா மையத்தில் வைத்து தெலங்கானா மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
ஏற்கெனவே, பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் வெளியிட்ட அறிக்கையில், ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலும் முக்கியத் திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.