உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவில் மீட்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. சார் தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோ மீட்டர் குறைக்கும் நோக்கத்தில் சுமார் 1,383 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 12ஆம் தேதி அதிகாலை பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மாநில பேரிடர் மீட்பு படை உத்தரகாண்ட் கமாண்டன்ட் மணிகாந்த் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசினார்.
உணவுப் பொருட்கள் மற்றும் சில மருந்துகள் இன்று தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் தாம் பேசியதாகவும் அவர் கூறினார். 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக தெரிவித்ததாகவும், விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.