கேரளாவில் 5 -வது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 110 நாளில் விசாரணை முடித்து, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த தம்பதியினரின் 5 வயது சிறுமி கடந்த ஜூலை 28-ம் தேதி திடீரென காணாமல் போனார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமியை பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் அழைத்து சென்றது தெரிய வந்தது.
விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை குப்பைத் தொட்டியில் வீசியது தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் காமக் கொடூரன் அஸ்பாக் ஆலமை என்பவனை போலீசார் கைது செய்தனர். 30 நாட்களில் புலன் விசாரணை நடத்தி, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
26 நாட்களில் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், 110 -வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காமக் கொடூரன் அஸ்பாக் ஆலம் குற்றவாளி என்றும், அஸ்பாக் ஆலமுக்கு தூக்கு தண்டனை வித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.