ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட், இந்திய விமானப்படைக்கு விமான ஆயுதங்களை கூட்டாக தயாரிப்பது குறித்து இந்திய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ரோசோபோரோனெக்ஸ்போர்ட், நிறுவனம் இந்திய தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடன் இணைந்து விமான ஆயுதங்கள் கூட்டாக தயாரிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் எந்தெந்த இந்திய நிறுவனங்கள் ஈடுபடும் அல்லது உற்பத்தி எப்போது தொடங்கும் என்பது போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் இன்ஸ்டிட்யூட் (எஸ்ஐபிஆர்ஐ) இந்த ஆண்டு அறிக்கையின்படி, 2022ல் இந்திய பாதுகாப்பு இறக்குமதியில் 45% பங்கைக் கொண்டு ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையராக தொடர்வது தெரியவந்துள்ளது.
Su-30MKI போர் விமானங்கள், டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் ஷெல்களை ரோசோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து AK-203 கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.