கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்று பார்வையிட்டார் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலிருந்து அதன் உதிரிப்பாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் என்று பியூஷ் கோயல் கூறினார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு நேற்று சென்றார். அவர், ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையப் பார்வையிட்டார். மேலும், டெஸ்லா குழுமத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இதுகுறித்து பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லாவின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்டேன். திறமையான இந்தியப் பொறியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் மூத்த பதவிகளில் பணிபுரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் டெஸ்லாவின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் குறிப்பிடத்தக்கப் பயணத்தில் இந்தியர்கள் பங்களிக்கின்றனர்.
டெஸ்லா மின்சார வாகன விநியோக சங்கிலியில் இந்தியாவிலிருந்து ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் சப்ளையர்களின் முக்கியத்துவத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறோம்.
இந்தியாவிலிருந்து அதன் உதிரிப்பாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் பயணத்தில் டெஸ்லா உள்ளது. மேலும் இந்தத் தருணத்தில் எலான் மஸ்க் உடனான சந்திப்பை தவறவிட்டுவிட்டேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா வந்த சிறிது நேரத்திலேயே, சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை பியூஷ் கோயல் சந்தித்தார். இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளாதாரக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்து குறித்தும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.