தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.