சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் இன்று முதல், ‘டெர்மினல் – 1, டெர்மினல் – 4’ என, இரண்டு பிரிவுகளாக செயல்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2 இலட்சத்து 21 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் செலவில், இரண்டு கட்டங்களாக கட்ட, இந்திய விமான நிலைய ஆணையம், 2018-ஆம் ஆண்டு பணிகளைத் தொடங்கியது.
முதல் கட்ட பணி, 1 இலட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், ஆயிரத்து 260 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் – 2 பிரிவை கடந்த ஏப்ரல் மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட, டெர்மினல் – 3 மற்றும் 4 முழுவதுமாக மூடப்பட்டன. டெர்மினல் – 3-ஐ இடிக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவடைந்ததும், இரண்டாம் கட்ட கட்டுமான பணி தொடங்கும்.
பழைய சர்வதேச முனையத்தின், டெர்மினல் – 4, நல்ல நிலையில் இருப்பதால், அதை இடிக்காமல், கூடுதல் உள்நாட்டு முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதை மாற்றி அமைக்கும் பணி முடிந்துள்ளது. நேற்று டெர்மினல் – 4-ல், சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்படுவது நடந்தது.
இன்று அதிகாலையில் இருந்து புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் – 4, முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் – 4-ல், ஏர் இந்தியா மற்றும் அதைச் சார்ந்த அலயன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்படும் டெர்மினல் – 1ல், இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும்.
சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் – 1, டெர்மினல் – 4 என்று இரு முனையங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணியருக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி கிடைக்கும். அதோடு கூடுதல் உள்நாட்டு விமானச் சேவைகளும் தொடங் உள்ளது என்று கூறினார்கள்.