5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளிப் பரிசாக வழங்கினார்.
பிரிட்டன் பிரதமராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக். இவரது இல்லத்தில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். ஆகவே, இவ்விழாவில் பங்கேற்குமாறு ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் நடந்த தீபாவளி கொண்டாடட்டத்தில் தனது மனைவி கியாகோவுடன் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். தொடர்ந்து, ரிஷி சுனக் இல்லத்தில் ஜெய்சங்கருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு ஜெய்சங்கர் தீபாவளிப் பரிசாக வழங்கினார்.
இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ரிஷி சுனக், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்தார்.