கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 400,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் தாயகம் திரும்பினர்.
அக்டோபரில் ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த தொடங்கியதில் இருந்து, சுமார் 400,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அந்நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தற்போது பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் பிரஜைகள் தங்கள் நிலைமை குறித்து கவலை தெரிவித்தனர். தாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
“நான் பாகிஸ்தானில் அடைத்து வைக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிறது. என் தந்தையை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்தேன், என் தந்தை தற்போது மருத்துவமனையில் இருக்கிறார், ஆனால் நான் சிறையில் இருக்கிறேன் என ஆப்கானிஸ்தான் அகதியான ஹமிதுல்லா, தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஆப்கானிஸ்தான் அகதி அப்துல்லா, கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் சிறையில் இருப்பதாகவும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறினார்.
ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகளை கைது செய்து பாகிஸ்தான் போலீசார் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் கவுன்சில் தலைவர் மீர் அஹ்மத் ரவுபி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், தற்போது மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகவும் நாடு கடத்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.