திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அழகு நிலையம் செல்ல முயன்றபோது, இரயில் மோதி அதே இடத்தில் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் ரேகா (22). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
வழக்கம் போல் கல்லூரி முடிந்து பின்னர் மாலை வீட்டிற்கு வந்த ரேகா, செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அழகு நிலையம் செல்வதற்காக, தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது, செவ்வாப்பேட்டை இரயில் நிலையத்தில் வண்டியை விட்டுவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற அதிவேக இரயில் ரேகா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு கல்லூரி மாணவி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், அங்கு வந்த போலீசார், ரேகாவின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.