பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பேச்சு ஆங்கிலேய அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றும், அறிவார்ந்த பாப்பையா அப்பாவு போல் பேசுவதா என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி முன்னிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சி பட்டிமன்றத்தில் நடுவராக பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஆங்கிலேயே கிறித்தவர்கள் வந்துதான் கல்வி கொடுத்தனர் எனப் போகிற போக்கில் பேசியுள்ளார்.
இது ஆங்கிலேய சகுனி மெக்காலே வகுத்த சதியின் வெளிப்பாடு. இவர் மட்டும் அல்ல மெத்தப் படித்த பல மேதாவிகளுக்கும் இங்கிலாந்து கிறித்தவ ஆட்சி தான் பாரதத்தின் கல்வியை, மருத்துவத்தை, தொன்மையை, விவசாயத்தை, காடுகளை என எல்லாவற்றையும் அழித்தது என்பதை உணரவில்லை.
அது மட்டுமல்லாது எப்படி எல்லாம் அழித்தார்கள் என்ற செய்தியை கூட சுதந்திர இந்தியாவில் நாம் உரக்க பகிரங்கமாகச் பேசக்கூட இல்லை. அதனாலேயே அவை இல்லை என்றாகி விடாது. இப்படிப்பட்டவர்கள் முதலில் மகாத்மா காந்திஜியின் முதன்மை சீடரான தரம்பால் , ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு வந்தபோது இந்தியர்களின் நிலை குறித்து அவர்களே எழுதி வைத்த ஆவணங்களை ஆய்வு செய்து அதற்கான ஆதாரங்களை சேகரித்து ஒரு தொகுப்பாக Beautiful Tree என்ற நூல் வெளியிட்டுள்ளார்.
அதன் தமிழாக்கம் “அழகிய மரம்” என்றுவெளிவந்துள்ளது. மேலும் சில நூல்களும் வந்துள்ளன. அவற்றை படித்தால் ஆங்கிலேய கல்வி நம்மை எப்படியெல்லாம் சீரழித்து உள்ளது என்பது வெளிப்படையாக புரியும்.
ஆங்கிலேயர்களது கல்வியின் சீரழிவை மகாகவி பாரதியார் தனது சுயசரிதையில் எழுதியதை சாலமன் பாப்பையா அவர்களும் படித்து உணர்ந்திருப்பார். ஆங்கிலேய கிறித்துவர்கள் ஆட்சியால், ஆங்கிலேய மோகத்தால் நமது பராம்பரிய தொழில் வளத்தை, நிபுணத்துவத்தை இழந்ததோடு அதனை நாமே இகழவும் வைத்தது. அவற்றை கேவலமாக சிந்திக்க வைத்தது. உதாரணமாக விவசாயம், நெசவு போன்ற பாரம்பரிய நடைமுறையை இழந்தோம். குமாஸ்தா கல்வி உயர்வென போற்றி பரப்பினோம்.
கிறித்துவ மிஷனரிகள் தாக்கத்தால் இந்து மாணவர்கள் நமது பண்பாட்டை கலாச்சாரத்தை இழந்து விடக்கூடாது என்று இந்துக்கள் கவலைப்பட்டார்கள்.
நவீன கல்வியுடன் நமது சனாதன இந்து நம்பிக்கைகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல உருவாக்க இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் அக்கறை காட்டினார்கள்.
உதாரணமாக காரைக்குடி அழகப்பா செட்டியார், காஞ்சிபுரம் பச்சையப்பன் முதலியார், செங்கல்வராய நாயக்கர், தெற்கே இந்து பரிபாலன நாடார்கள் சங்கம் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், கொங்கு மண்டலத்தில் உருவான கொங்கு வேளாளர் கல்வி நிலையங்கள், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து பள்ளி, தியாசிபிக்கல் சோசைட்டி பள்ளி, சுவாமி சகஜானந்தா துவக்கிய நந்தனார் பள்ளி என பலவும் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. இதூபோன்ற இந்துக்களில் தோன்றிய வள்ளல்கள் தங்கள் சொத்துக்களை இந்துக்களின் கல்வி மேம்பாட்டிற்கு அளித்தார்கள்.
அதேசமயம் குருகுல முறையில் தமிழ் கற்றவர்களே சான்றோனாக இன்றும் போற்றப்படுகிறார்கள். அத்தகைய குருகுலங்களை சைவ ஆதீனங்கள், ஆன்மிக மடங்கள் சேவையாக செய்து இந்து ஆன்மிகத்தை தமிழ் இலக்கியங்களை காப்பாற்றி வந்துள்ளன. சுதந்திர பாரதத்திலும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட பாதிப்பு எனும் விஷம் குறையவில்லை என்பதற்கு சாலமன் பாப்பையாவின் பேச்சு உதாரணம்.
கிறித்துவ பாதிரிகள் குறிப்பாக திருக்குறள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தார்கள் என திராவிட அரசியல்வாதிகள் பெருமை பேசுவார்கள். அப்படி ஆங்கில திருக்குறள் திருவாசகம் எத்தனை வெளிநாடுகளில் பரப்பட்டது? எத்தனை ஆங்கிலோ இந்தியன் சர்ச்சுகளில் படிக்கப்பட்டது? தமிழனை முட்டாளாக்கி மதமாற்றம் செய்ய அவர்கள் கட்டிய வேடம்தான் தமிழ் பற்று.
எனவே, சாலமன் பாப்பையா போன்றவர்கள் தங்கள் அறியாமை பொது தளத்தில் வெளிப்படுத்துவதற்கு முன் இதனால் தங்களை இந்த உலக இவர்களின் எப்படி எடைபோடும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.
லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஊடகத்தில் இதுபோன்ற தவறான கருத்துகள் பேசுவது அறிவார்ந்த செயல் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். தன் நெஞ்சு அறிந்து பொய் சொல்வதை பாரதி மொழியில் சொல்வதானால் “படித்தவன் பொய் சொன்னால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனும் அறச்சீற்றத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும்.
அறிவார்ந்த பாப்பையா அவர்கள் அப்பாவு அவர்களைப் போல் பேசுவது வேதனை தருகிறது. தனது கிறித்துவ விசுவாசத்தால் உண்மைக்கு புறம்பான கருத்தை பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.