உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜைக்காக நடை 16 -ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் டிசம்பர் மாதம் 27-ம் தேதி வரை, அதாவது 41 நாட்களுக்கு திருக்கோவில் நடை திறந்திருக்கும்.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களைத் தீட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், அதேபோல, வரும் டிசம்பர் மாதம் 7,14,21, 28-ம் தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
இதனைத்தொடர்ந்து, வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், அதேபோல, வரும் டிசம்பர் மாதம் 7,14,21, 28-ம் தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
இந்த இரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.