வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றும் முயற்சிக்கு, பக்தர்களும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இங்கு கடந்த 9-ம் தேதியான வியாழக்கிழமை அன்று காலை நேரத்தில் நெமிலியைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தலைமையில், 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருக்கோவிலுக்கு வந்துள்ளனர்.
அங்கு, திருக்கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்களின் காணிக்கையை எடுத்து கோவிலைக் கையகப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
மேலும், திருக்கோவிலிலிருந்த பக்தா்களை உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால், அங்கிருந்த பக்தர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். இதனால், பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பக்தர்கள் கோவிலை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில், வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றa உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், அக்கம் பக்கம் பகுதிகளில் உள்ள பக்தர்கள் திரண்டு வந்தனர்.
மேலும், அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருக்கோவிலைக் கையகப்படுத்தும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலை காப்பாற்றும் வகையில், இந்து அமைப்புகள் விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.