நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. இந்த திருத்தலத்தில் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபத் திருவிழா காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் வரும் 17 -ம் தேதி அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். பின்னர், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும். 22 -ம் தேதி காலை 63 நாயன்மார்களின் உற்சவமும், இரவு வெள்ளி வாகனத்தில் உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 23 -ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 24 -ம் தேதி மாலை 4 மணிக்கு பிச்சாடனார் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா 26-ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
தொடர்ந்து, தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெறும். 27 -ம் தேதி சந்திரசேகரர், 28 -ம் தேதி பராசக்தி அம்மன், 29 -ம் தேதி முருகன் தெப்பம் உற்சவம் நடைபெறும். நவம்பர் 30-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது.