ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கில், வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களின் மூலம் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதாக இருவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபைத் மாலிக் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அப்பாஸ்பூரில் வசிக்கும் முகமது திலாவர் இக்பால் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இருவரும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதியில் ஈடுபட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மவுலானா மசூத் அசார் ஆல்வியின் நெருங்கிய கூட்டாளியான திலாவர், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளால் தீட்டப்பட்ட பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஈடுபட்டதாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத பின்னணி கொண்ட இளைஞர்களை ஜிஹாதை தொடர தில்வார் தூண்டிவிடுவார் என்றும், மௌலானா மசூத் அசார் ஆல்வியின் வீடியோக்களையும் அவர் இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்வார் என்றும், இது இது இளைஞர்களை ஆயுதம் ஏந்தும்படி தூண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.