சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
அதேபோல, வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப நிறுவனமான ஆர்.ஐ.எஸ். டைரக்டர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சசிகலா நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், “எதிர்கால உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவது, சூழலியல் மாற்றம் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
உலகில் அதிகளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிய நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. நாட்டின் கடைக்கோடி மனிதன் வரை தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பது போன்ற அனைத்திலும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியா தயாரித்த குறைந்த விலை தடுப்பூசிகளை வாங்கி நிலைமையை சமாளித்தன.
ஆசியக் கண்டத்தில் சீனாவின் கடல் பகுதி மற்றொரு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. தங்களைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி அந்நாடுகளில் சீனா அதிகாரம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.
உதாரணமாக, இலங்கையின் உள்கட்டமைப்புக்கு கடனுதவி அளித்து அந்நாட்டில் துறைமுகம் கட்டி இருக்கிறது. இக்கடனை இலங்கை செலுத்த முடியாவிட்டால், இலங்கை சீனாவிடம் சரணடையும் நிலை ஏற்படும். அதேபோல், பாகிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கிறது.
சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான், இந்தியாவின் வளர்ச்சியும், தலைமைத்துவமும் உலகுக்குத் தேவைப்படுகின்றன” என்றார்.