உத்தராகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம் என மீட்பு பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உத்தராகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் சுமார் 1,383 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
கடந்த 12ஆம் தேதி அதிகாலை அந்த சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்பதற்காக கனரக துளையிடும் வாகனங்கள் டெல்லியில் இருந்து நேற்று கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் மீட்பு பணிகளை இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் அவர் பேசி ஊக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்கள் 2 கி.மீட்டர் இடைவெளியில் சிக்கியுள்ளதாகவும், அந்த இடைவெளியில், வெளிச்சம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் அனுப்பப்படுவதாகவும், அவர்களை விரைவில் மீட்பதே எங்கள் நோக்கம் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் இருந்து வந்துள்ள புதிய இயந்திரம் இயங்கி வருவதாகவும், அதன் சக்தியும் வேகமும் பழைய இயந்திரத்தை விட சிறப்பாக உள்ளதாகவும், இந்த மீட்பு பணியை 2-3 நாட்களில் முடிப்பதே நோக்கம் என்று அவர் கூறினார். சர்வதேச நிபுணர்களின் உதவியையும் நாடி உள்ளதாகவும் வி.கே.சிங் குறிப்பிட்டார்.