முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்காவும், 6-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆசையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்க உள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியா அணி இதுவரை 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது இல்லை. இந்நிலையில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக அரையிறுதி போட்டியில் வெற்றி பெறுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தது. அடுத்து விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் பார்முக்கு திரும்பினால் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.
பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் எதிரணியை மிரட்டுகின்றனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி சரிசம பலத்துடன் காணப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் அசுர பலத்துடன் காணப்படுகிறது. டி காக், வென் டர் டசன், மார்க்ரம், கிளாசன், மில்லர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
பந்துவீச்சில் ரபாடா அனுபவத்தை காட்டுகிறார். இங்கிடி, யான்சென், மஹராஜ் ஆகியோரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
ஆனால் தென் ஆப்பிரிக்க அணி, இலக்கை சேசிங் செய்வதில் தடுமாறுகிறது. முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை எட்டி, அபாயகரமான அணியாக காணப்படும் தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது பேட்டிங்கில் சொதப்பியுள்ளது.
ஆகையால், இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என கூறலாம். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்காவும், 6-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆசையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்க உள்ளதால், இந்த அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.