தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கும் முட்டலும் மோதலுமாகவே இருந்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல், நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, ஆளுநர் ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
இதை விசாரித்த நீதிமன்றம், விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த சூழலில், தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ரவி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். மேற்கண்ட மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மருத்துவப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சட்டப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அன்னை தெரசா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, மீன்வளம் மற்றும் கால்நடை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே செயல்பட வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
எனினும், வரும் 18-ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மேற்கண்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.