ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியிலுள்ள காந்தஹாரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதால், அது செல்ஃபி பாயின்ட்டாக மாறி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இதன் பயனாக தற்போது ஜம்மு காஷ்மீர் அமைதிப் பூங்காவாக மாறி இருக்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது, மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுவார்கள். இதனால், அம்மாநிலத்தில் அடிப்படை வசதிகளைக்கூட செய்ய முடியாமல் அரசு தடுமாறியது. ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மக்களும் தைரியமாகவும் சுதந்திரமாகவும் நடமாடத் தொடங்கி இருக்கிறார்கள். அதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்திருக்கிறது.
இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியிலுள்ள காந்தஹாரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு அளவு கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட் அவுட்தான் உள்ளூர் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஆகவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வாசிகளும் பிரதமரின் கட் அவுட் முன்பு நின்று செல்ஃபி எடுத்துச் செல்கிறார்கள். இதனால், அந்த இடமே செல்ஃபி பாயின்ட்டாக மாறி இருக்கிறது.
இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தினேஷ் கூறுகையில், “நான் காஷ்மீருக்கு வருவது இது 2-வது முறையாகும். முன்பு வந்தபோது பார்த்ததை விட தற்போது ஜம்மு காஷ்மீர் நிறைய வளர்ச்சிகளை கண்டிருக்கிறது. சாலைகள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கும்போது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணமாக பிரதமர் மோடியின் கட்-அவுட்டைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
அதேபோல, கார்கில் பகுதியில் வசிக்கும் முகமது தாகி கூறுகையில், “ஸ்ரீநகரை பார்வையிட வந்தேன். பிரதமர் மோடியின் கட்-அவுட்டைப் பார்த்ததும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். உடனே, பிரதமர் கட் அவுட்டுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோம்” என்றார்.
மற்றொரு சுற்றுலாப் பயணியான பெங்களூருவைச் சேர்ந்த சேத்தன் கூறுகையில், “காஷ்மீருக்கு சுற்றுலா வந்த நாங்கள் லால் சௌக்கைப் பார்க்க வந்தோம். பிரதமர் மோடியின் கட்-அவுட்டைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். இன்றைய காஷ்மீர் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.
மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நீல் ஷா கூறுகையில், “நாங்கள் காஷ்மீரில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றோம். ஆனால், பிரதமர் மோடியின் இந்த கட் அவுட் சுவாரஸ்யமானது. நாங்கள் முதல் முறையாக ஸ்ரீநகரில் இதைப் பார்க்கிறோம். இந்தியப் பிரதமரின் கட்-அவுட் இங்கு நிறுவப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.