எலான் மஸ்க் வாழ்க்கைக் கதையை அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார்.
இந்தப் புத்தகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தென்னாப்பிரிக்காவில் ஏழை குடும்பத்தில் பிறந்து, எலான் மஸ்க் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது குறித்த அனைத்து அம்சங்களும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான், தன் அசாத்திய திறனால் தொழில்நுட்ப வல்லுநராக வெற்றி பெற்றவர். ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியவுடன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடும் சவால்களை எதிர்கொண்டார். ஆனால் அதனை அவர் வெற்றிகரமாக முறியடித்தார்.
டெஸ்லா நிறுவனத்தை தொடங்கி தானியங்கி கார்களை உற்பத்தி செய்து அனைவரின் கவனத்தைப் பெற்றார். மேலும், விண்வெளி தொடர்பான ஆய்வுகளையும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் எலான் மஸ்கின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது.
எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் உரிமை A24 ஸ்டுடியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்குவார் என தெரிகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தி வேல் திரைப்படத்தை அரோனோஃப்ஸ்கி இயக்கியிருந்தார். அவர் Requiem for a Dream (2000), Black Swan (2010) மற்றும் Mother! போன்ற பிரபலமான படங்களையும் இயக்கியுள்ளார்.
எலான் மஸ்கின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், Nicolas Cage, Matt LeBlanc of Friends, Robert Downey Jr, Jesse Eisenberg ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.