சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான 5 மாடிக் கட்டடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 51 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணம் லியூலியாங் நகரில் யோங்ஜு என்கிற தனியார் நிலக்கரி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக 5 மாடிக் கட்டடம் ஒன்று இருக்கிறது. இக்கட்டடத்தில் இன்று காலை வழக்கம்போல பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அக்கட்டத்தின் 2-வது தளத்தில் காலை 6.50 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். எனினும், 70-க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த தீ விபத்தில் சிக்கி 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும், 51 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவைப் பொறுத்தவரை ஷாங்சி மாகாணத்தில்தான் மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.