அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு, தீபாவளி தினத்தன்று பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில், நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திட்டார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் இந்திய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தன்று நியூயார்க் மாகாணத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்தது.
இதை, நியூயார்க் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியான ஜெனிபர் இராஜ்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக நியூயார்க் சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்குப் பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில், அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார்.
இது குறித்து, ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கூறியதாவது, ”பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களால் நியூயார்க் நிறைந்துள்ளது. இந்த பன்முகத்தன்மையை அங்கீகரித்துக் கொண்டாட, தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளேன்,” என்று கூறினார்.