இந்தோனேசியா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தோனேசியாவின் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜகார்த்தா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியான் மையத்திற்கு இரு நாடுகளும் இணைந்து எவ்வாறு பங்களிப்பது மற்றும் அமைதி, செழிப்பு, பாதுகாப்பை முன்னேற்றுவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை விரிவுபடுத்துவது மற்றும் மிகவும் பாதுகாப்பான உலகத்தை நோக்கிய பொதுவான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத்சிங் மற்றும் ஆஸ்டின் ஆகியோர் விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீப ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் அடைந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றத்தை விரைவாக மதிப்பாய்வு செய்ய இரு தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.