டெல்லியில் போலி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் கிரேட்டர் கைலாஷில் அகர்வால் மருத்துவ மையம் இயங்கி வருகிறது. சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக தனது கணவரை அகர்வால் மருத்துவ மையத்திற்கு அக்டோபர் 10ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளார்.
அறுவை சிகிச்சை நிபுணர் ஜஸ்பிரீத் சிங் அறுவை சிகிச்சை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜஸ்பிரீத் சிங் அறுவை சிகிச்சைக்கு வர முடியாது என்றும், மகேந்தர் சிங் என்பவர் அறுவை சிகிச்சை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டதாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது கணவரின் அறுவை சிகிச்சையை மகேந்தர் சிங், நீரஜ் அகர்வால் மற்றும் பூஜா அகர்வால் ஆகியோர் செய்ததாகவும், ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த போது அவர் அசௌகரியம் இருப்பதாக கூறியதால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
மகேந்தர் சிங், உண்மையில் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் அல்ல என்றும், அவர் ஒரு ஆய்வக தொழிநுட்ப வல்லுநர் என தனது புகாரில் அந்த பெண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், அகர்வால் மருத்துவ மையத்தை நடத்துவதாகக் கூறப்படும் டாக்டர் நீரஜ் அகர்வால், டாக்டர் ஜஸ்பிரீத் சிங், அகர்வாலின் மனைவி பூஜா மற்றும் முன்னாள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மகேந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் ஏற்கனவே நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது பல்வேறு நோயாளிகள் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட மருந்துகள், அங்கீகரிக்கப்படாத ஊசிகள், பல்வேறு நோயாளிகளின் அசல் மருந்து சீட்டுகள், பல்வேறு வங்கிகளில் இருந்து 47 காசோலை புத்தகங்கள், 54 ஏடிஎம் கார்டுகள், அகர்வாலின் வீடு மற்றும் கிளினிக்கில் கைப்பற்றப்பட்டது.