சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராகத் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பஷார் அல் ஆசாத் பயன்படுத்தியதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பஷார் அல்-அசாத்தின் சகோதரர் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டூமா (Douma) நகரம் மற்றும் கிழக்கு கௌட்டா (Eastern Ghouta) மாவட்டத்தில் இரசாயன தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணைக்குப் பின் கைது வாரண்ட்கள் வந்துள்ளன. இந்த இராசயானத் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக, ஒரு நாட்டின் தலைவருக்கு, வேறொரு நாடு பிடிவாரண்ட் பிறப்பிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், கௌடாவில்நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட முதல் சர்வதேச பிடிவாரண்ட் இது என்று கூறப்படுகிறது.
உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டின் கீழ், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களை பிரான்ஸ் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.