பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்கட்சியினர் அவதூறு பேசுவதாக குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் பேச்சு குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறுகையில், “பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசியும், சினிமாவை மேற்கோள்காட்டிய பிரியங்கா காந்தி இவ்வளவு கீழ்த்தரமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இங்கு நடிப்பிற்காகவோ, படங்களுக்காகவோ அல்லது சல்மான் கான் என்கிற பெயருக்காகவோ தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மக்களின் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை பற்றி பேச வேண்டும். அதை விடுத்து காங்கிரஸ் தலைவர்கள் இப்படிப் பேசுவது தேர்தலில் அவர்கள் தீவிரம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.