மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார்.
புத்னி சட்டமன்றத் தொகுதியில் சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நடிகர் விக்ரம் மஸ்தாலை காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. 40 வயதான இவர் 2008 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான ‘ராமாயணம் 2’ இல் ‘ஹனுமான்’ வேடத்தில் நடித்தார்.
சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், சிந்த்வாரா மாவட்ட பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா முன்னாள் தலைவரும், பாஜகவின் விவேக் பண்டி சாஹுவை எதிர்த்து அவரது சொந்த மண்ணில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே திம்மானி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 147, 148 இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், மோதலை கட்டுப்படுத்தினர்.
இதேபோல் சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள 20 தொகுதிகளில் கடந்த 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 தொகுதிகளில் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.