இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் காஸா நகரில் இருந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார். அவர், சொந்த ஊர் திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், தீவிரவாதிகள் 750 பேர் உட்பட 11,500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
காஸாவில் போர் உக்கிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களை பத்திரமாக மீட்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இருக்கும் இந்தியத் தூதரங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காஸா நகரில் வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்கிற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த 13-ம் தேதி காஸா எல்லையைக் கடந்து எகிப்தின் கெய்ரோ நகரைச் சென்றடைந்தனர். தற்போது, இருவரும் கெய்ரோவிலிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து லுப்னா அளித்த பேட்டியில், “காஸாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன். காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
தண்ணீர், மின்சாரம் அல்லது இன்டர்நெட் எதுவுமே இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, காஸா நகரில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம்.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயமடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. என்னை பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.