ஜம்மு காஷ்மீரில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அதேசமயம், அடங்க மறுத்து அத்துமீறும் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்டனர்.
எனவே, ஜம்மு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்குச் சென்று பதுங்கிக் கொண்டனர். இதனால், மாநிலத்தில் தீவிரவாதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதேசமயம், உள்ளூரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அவ்வப்போது அத்துமீறி கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ கர்னல், மேஜர், இராணுவ வீரர், மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் தீவிரவாத வேட்டை தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இராணுவத்தின் 34 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், 9 பாரா (உயர் சிறப்புப் படை பிரிவு), மாநில போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப். ஆகியோர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. நேற்று முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து, இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. குல்காம் மாவட்டம் நெஹாமா பகுதியில் உள்ள சாம்னோ என்ற இடத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனவே, கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இத்தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும், கொல்லப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.