குளிர்காலம் தொடங்கி உள்ளதை அடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, கேதார்நாத் ஆகிய கோவில்களின் நடை அடைக்கப்பட்டன.
உத்தரகாண்ட் மாநிலம், இமயமலையில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால், ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், கேதார்நாத் கோவிலில் முறையான பூஜைகள் செய்யப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டனர்.
கோவிலின் நடை சாத்தப்பட்ட பிறகு கேதார்நாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டு கேதார்நாத் கோவிலில் 19.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாகக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.