இந்திய-மியான்மர் எல்லையில் மியான்மர் ராணுவம் புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து மியான்மரில் இருந்து தப்பி சம்பாய் மாவட்டத்திற்குள் நுழைந்த சுமார் 5000 மியான்மர் நாட்டவர்கள் சோகாவ்தார் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அகதிகளுக்கு உணவு, உடைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவு. விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வன்முறையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மியான்மர் அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மியான்மரில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய எல்லை அருகே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு மோதல் தொடங்கியதில் இருந்து, ஏராளமான மியான்மர் குடிமக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் நிலைமையை சரியான முறையில் கையாண்டு வருவதாகவும், தங்கள் நாட்டிற்கு, திரும்பிச் செல்ல விரும்புபவர்களின் எண்ணங்கள் எளிதாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு 2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.