திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் அலகு 3 திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் இருந்து 3 ஆயிரித்து 174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயத்தை அழிக்கும் திமுகவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 125 நாட்களுக்குத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கடந்த 2-ஆம் தேதி, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது, விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை அடுத்து, விவசாயிகள் மீது மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, தடையை மீறி பேரணியாக சென்றது, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடந்த 4-ஆம் தேதி 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளில் 7 பேர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கடந்த 15-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர்.