சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதி வரை உள்ள ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.
பொதுவாக கந்த சஷ்டி விழா அறுபடை வீடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பதுடன், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா திருச்செந்தூர் கடற்கரையில் நாளை மாலை நடைபெறுகிறது.
சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவில் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் அதிகாலை அம்பாள் தபசு காட்சிக்குப் புறப்பாடும், மாலை 6 மணியளவில் சுவாமி அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், அன்றிரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.