பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதேபோல், நவம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மண்டனோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவை மையமாகக் கொண்டு 789 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வணிக கட்டடங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், வணிக வளாகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளோம். மேலும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.