சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் வாஜிஹுதீன் அலிகான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான இவரை, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் சுபேலா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஸ்மிருதி நகரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வாஜிஹுதீன், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுடனும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடனும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
மேலும், டெல்லி காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி முகமது ரிஸ்வானுடன் வாஜிஹுதீனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாஜிஹுதீனை ஜான்ஸி மாவட்ட தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் லக்னோ தீவிரவாத எதிர்ப்புப் படை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில்தான், வாஜிஹுதீன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீராக (தலைவராக) செயல்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இவர் டெல்லி மற்றும் புனேவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட முயன்றதும அம்பலமாகி இருக்கிறது. குறிப்பாக, காஜியாபாத்திலுள்ள யதி நரசிங்கநந்த் சரஸ்வதி உட்பட பல்வேறு இலக்குகளை தாக்கு குறிவைத்திருப்பதும் தெரியவந்தது.
அதோடு, டெல்லியில் கைது செய்யப்பட்ட புனே பகுதியின் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிர்வாகி ஷாநவாஸுடன் இணைந்து வெடிகுண்டு பயிற்சி முகாம்களையும் நடத்தியது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிராக ஜிஹாத் நடத்துவதற்கு இஸ்லாமிய இராணுவத்தைக் கட்டமைப்பதில் வாஜிஹுதீன் தீவிரம் காட்டி வந்திருக்கிறார். இதற்காக, ஹயா என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடச் செய்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், டெல்லியில் ஷாநவாஸ், அர்ஷத் வர்ஷி, ரிஸ்வான் ஆகியோரைத் தொடர்ந்து, வாஜிஹுதீனையும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்திருக்கிறார்கள். தற்போது, வாஜிஹுதீனை போலீஸார் 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள். இதில் நடைபெறும் விசாரணையில் வாஜிஹுதீனைப் பற்றியும், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்பாடுகள் பற்றியும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.