விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில், பூஜைக்குச் சென்ற இந்து பெண்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்கிற பெயரில் ஒரு யாத்திரையை நடத்தினர்.
குருகிராமின் சிவில் லைன்ஸில் இருந்து தொடங்கிய யாத்திரை கேத்லா மோடி அருகே சென்றபோது, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பலாக நின்றுகொண்டு யாத்திரையை தொடர விடாமல் தடுத்தனர். மேலும், யாத்திரையில் வந்த பெண்கள் உள்ளிட்டோர் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஒரு காவலர், ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 156 பேர் கைது செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு நூஹ் மாவட்டம் பதற்றமான பகுதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், அதே நூஹ் மாவட்டத்தில் மீண்டும் இந்து பெண்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அதாவது, கோடைக் காலத்தில் கிணறு வற்றாமல் இருக்கவும், தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கவும் ‘குவான்’ என்கிற பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்
அந்த வகையில், இந்த பூஜையைச் செய்வதற்காக நுாஹ் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு குழுவாக இரவு நேரத்தில் சென்றிருக்கிறார்கள். வழியில் இருந்த மசூதியைக் கடந்து சென்றபோது, மசூதியில் இருந்த மர்ம நபர்கள் சிலர், அப்பெண்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இத்தாக்குலில் 8 பெண்கள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ‘குவான் பூஜையில் பங்கேற்கச் சென்ற பெண்கள் மீது மதரசாவில் இருந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர்களிடம் விசாரணை நடக்கிறது’ என்றனர்.