தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு சற்று குறைந்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீட்டில் மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த சில வாரங்களாகக் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும், காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு, 461-ஆக இருந்த நிலையில், இன்று காலை 398 ஆக குறைந்துள்ளது. காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசம் என்ற பிரிவில் உள்ளது.
இதற்கிடையே, கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் காற்றுத் தரக் குறியீட்டின் அளவு 450 புள்ளிகளுக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, மத்திய அரசின் காற்று மாசுக்கட்டுப்பாட்டு செயல் திட்டத்தின் கீழ், கட்டுமானப் பணிகளுக்குத் தடை மற்றும் தலைநகருக்குள் மாசுபடுத்தும் லாரிகள், தனியாா் பேருந்துகள் நுழைவதற்கு தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதே சமயம் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.