திருச்செந்தூர் கோவிலில் கட்டணக்கொள்ளை நடப்பதாகவும், அதனை அறநிலையத்துறை அமைச்சசர் மறைக்க முயல்வதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திருச்செந்தூரில் உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா நடந்து வரும் வேளையில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு வரும் நிலையில் தமிழக அரசின் கட்டணக் கொள்ளை பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பக்தர்களிடம் நேரிடையாக பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடாக அதிகாரிகள் சிலர் அனுமதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்ததுள்ளது. ஆனால் காவல்துறை, அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்செந்தூரில் சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமல்படுத்தி வசூல் வேட்டை நடத்தலாம் என்ற எண்ணத்தில் அறநிலையத்துறை இருப்பதாக தெரிகிறது.
இந்து கோவில்களை கொள்ளையடிக்கவும், இந்து பக்தர்களை சுரண்டி பிழைக்கவும் திராவிட மாடல் திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியே இது என்பது உறுதியாகிறது.
திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டணக் கொள்ளையில் அறநிலையத்துறை ஈடுபடுவது சட்டவிரோத செயலாகும். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் . சேகர் பாபுவோ கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.
திருச்செந்தூரில் எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை, ஏற்கெனவே உள்ளது தான் என அவர் அளிக்கும் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். அவரது திராவிட மாடல் புளுகு மூட்டைகளை மக்கள் நம்ப தயாரில்லை. திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் கட்டணக் கொள்ளையை மறைப்பதை நிறுத்தி விட்டு அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் அவர், கட்டணக் கொள்ளையை நிறுத்த முன் வரவேண்டும்.
அதுமட்டுமின்றி திருச்செந்தூர் கோவிலில் அராஜகமான முறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.
தமிழக அரசின் கட்டணக் கொள்ளையை நிறுத்தக் கோரி முருக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரண்டு அறப்போராட்டம் நடத்தினர். அறவழியில் போராடிய பக்தர்கள் மீது காவல் துறை கடுமையான பலபிரயோகத்தை கையாண்டுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்க தக்கது.
இந்து விரோதமாக செயல்படும் இந்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எந்த வகையிலும் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் எல்,முருகன் கூறியுள்ளார்.