மக்கள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்காமல் ஆளுநர் விவகாரத்தை திமுக கையில் எடுப்பது அவசியம் தானா என் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்தும், மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் உரையை கண்டித்தும் தமழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, வேந்தர் பதவியில் முதல்வர்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம்தானா? நாட்டில் வேறு பிரச்சினைகள் இல்லையா? மக்கள் பிரச்சினையை மையப்படுத்தாமல், ஆளுநரின் நடவடிக்கையை திமுகவினர் மையப்படுத்துவதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மக்கள் பிரச்சினை ஏராளம் உள்ளதாகவும், மின்கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட வருகின்றனர். அதேபோல் வீட்டு வரி உயர்வு 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவை அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து தரக்குறைவாக பேசுவது வருந்தத்தக்கது என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.