அதிகாரப்பூர்வ அனுமதியின்றி லோயர் பரேலில் டெலிஸ்லே பாலத்தின் 2-வது பாதையை திறந்து வைத்ததற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் தலைவர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மும்பையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், டெலிஸ்லே பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு மும்பையையும் லோயர் பரேலையும் இணைக்கும் வகையிலான இப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கரி ரோட்டை லோயர் பரேலுடன் இணைக்கும் மற்றொரு பகுதி செப்டம்பரில் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாலத்தின் மீதமுள்ள வேலைகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட பாலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும், பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று இன்னும் சான்றளிக்கப்படவில்லை. இந்த சூழலில், இப்பாலத்தின் 2-வது பகுதியை அப்பகுதியின் எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே திறந்து வைத்திருக்கிறார்.
இதையடுத்து, ஆதித்ய தாக்கரே மீது பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி.) சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரில் பாலம் இன்னும் முழுமையடையாததோடு, பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்றும் சான்றளிக்கப்படவில்லை. அப்படி இருக்க, பாலத்தை திறந்து வைத்த ஆதித்ய தாக்கரேவின் செயல் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பாலத்தை முன்கூட்டியே பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் குடிமை அமைப்பு கவலை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ஆதித்ய தாக்கரே, சுனில் ஷிந்த் மற்றும் சச்சின் அஹிர் ஆகியோருக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 143, 149, 336 மற்றும் 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.