தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். 2ஜி கட்சி, அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3ஜி கட்சி, காங்கிரஸ் 4ஜி கட்சி என்று தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைவதால், இம்மாநிலத்தில் இம்மாதம் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, 3 கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலங்கானாவில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “தெலங்கானாவை 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகளில் இருந்து விடுவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். பி.ஆர்.எஸ். என்பது “பிரஷ்டாச்சர் ரிஷ்வத் சமிதி” என்பதாகும். தெலங்கானாவில் அந்த அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி கட்சிகள். அதாவது, 2ஜி என்பது 2 தலைமுறைகளாக ஆட்சியை நடத்தும் கே.சி.ஆர். மற்றும் கே.டி.ஆர். ஆகியோரின் கட்சிகள். அதேபோல, அசாதுதீன் ஒவைசி 3 பேரால் ஆளப்பட்டதால் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3ஜி கட்சியாகும். காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தற்போது ராகுல் காந்தி என்பதால் 4ஜி கட்சியாகும்.
பி.ஆர்.எஸ். என்றால் ஊழல். மியாபூர் நில ஊழல், காளேஸ்வரம் திட்டத்தில் லஞ்சம் மற்றும் மது ஊழலையும் பி.ஆர்.எஸ். கட்சி செய்தது. காங்கிரஸும், பி.ஆர்.எஸ்.ஸும் குடும்ப வம்சக் கட்சிகள். கே.சி.ஆர். தனது மகனை முதல்வராக விரும்புகிறார். சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறார்.
ஆனால், நாங்கள் ஆட்சி அமைக்கும்போது எந்த மகனும், மகளும் முதல்வராக மாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். கே.சி.ஆரின் அலட்சியத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு இத்தேர்தல் உதாரணமாக இருக்க வேண்டும். இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல்வரைத்தான் தேர்ந்தெடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருக்கிறார்” என்றார்.