ஒடிஸாவில் ஒப்பந்ததாரருக்கு 18 லட்சம் ரூபாய் செலுத்தாததால் கோட்ட முதன்மை பொறியாளர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1981-ம் ஆண்டு புவனேஸ்வரில் நா தலா என்று அழைக்கப்படும் துறைத் தலைவர்களின் 9 மாடிக் கட்டடத்தை கட்டியது. இக்கட்டடம் கட்டிய வகையில், இந்தியா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாரா 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.
நீண்ட காலமாக இப்பணம் செலுத்தப்படாததால், கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியாவின் நிர்வாகக் கூட்டாளர்களில் ஒருவரான பிரேந்திர குமார் பதக், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு மத்தியஸ்தரை நியமித்தது. அந்த மத்தியஸ்தர், கடந்த 1982-ம் ஆண்டில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இதன் பிறகும் பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, மத்தியஸ்தரின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனாலும், இதன் பின்னரும் பணம் செலுத்தப்படவில்லை. இதையடுத்து, நகரிலுள்ள சிவில் நீதிபதி மூத்த பிரிவு நீதிமன்றம், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு வட்டியுடன் செலுத்துமாறு கடந்த ஆண்டு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியது. எனினும், கட்டணம் செலுத்தப்படவில்லை. எனவே, தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஏலம் விடவும், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 18 லட்சத்தை ஒப்பந்ததாரருக்குச் செலுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாராவுக்குச் சொந்தமான தளபாடங்கள் மற்றும் பொருட்களை நீதிமன்ற அதிகாரிகள் ஜப்தி செய்தனர். அதன்படி, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி, டேபிள், அலுவலக நாற்காலிகள், சோஃபாக்கள், ஸ்டேண்டிங் ஏ.சி., டெல்-ஆல்-இன்-ஒன்-1, ஹெச்பி லேசர்ஜெட் பிரிண்டர், ப்ளைன் டேபிள்கள், எல்.ஜி. ஸ்மார்ட் டி.வி., கீபோர்டுகள், ஆப்டிகல் மவுஸ் உள்ளிட்டவை அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.
தொடர்ந்து, இப்பொருட்களை ஏலம் விடும்படி புவனேஸ்வர் மூத்த பிரிவு துணை நீதிபதி. எனினும், மாநில அரசு ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் முறையில் முழுமையாக பணம் செலுத்தியதால் ஏலம் நிறுத்தப்பட்டது.