2027 ஆம் ஆண்டுக்குள் நாய் இறைச்சி உண்பதை முழுமையாக தடை செய்ய தென் கொரியா திட்டமிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில், நாய் இறைச்சி சாப்பிடுவது பழைய நடைமுறையாக உள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்க ஒரு வழியாகவும் கருதப்படுகிறது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை உண்ணும் பழக்கம் வெளிநாடுகளில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
தென் கொரியாவில் விலங்குகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், நாய் இறைச்சி உண்பதை தடை செய்யவும், பழங்கால வழக்கத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சித்தலைவர் யு ஈயு-டாங் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் ஆளும் கட்சியும் இந்த தடையை அமல்படுத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தும் என்று யூ கூறினார், இந்த தொழிலை சார்ந்த விவசாயிகள், இறைச்சிக் கடைக்காரர்கள், மாற்று வணிகங்களில் ஈடுபட முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கடினமாக பிரச்சாரம் செய்த நம் அனைவரின் கனவு நனவாகி வருவதாக ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.