பொதுவாக கந்த சஷ்டி விழா அறுபடை வீடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்ததுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா திருச்செந்தூர் கடற்கரையில் நவம்பர் 18ஆம் தேதி மாலை நடைபெற்றது.
சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். முதலில் யானை முகமாகவும், பின்னர் சிங்க முகமாகவும் அடுத்தடுத்து உருமாறி போரிடும் சூரபத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார்.
அப்போது கடற்கரையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
ஆணவம் மிகுந்த சூரனை முருகப்பெருமான் 6 நாள் போருக்குப்பின் வதம் செய்தார். சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகப்பெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான்.
உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.
சூரசம்ஹார விழாவை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் இதனையொட்டி, திருச்செந்தூரில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.