சபரிமலையில் வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குவதாக தேவஸ்தான தலைவர் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
13 மையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்து மையங்களிலும் முன்பதிவுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 45 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவர், சிறுமியர்கள் மற்றும் வயதானவர்களுக்குச் சிறப்புத் தரிசன வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.