வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கால்வாய் வழியாகத் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக, வைகை அணை உட்பட தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும், தண்ணீர் தேவைப்படாததால், முல்லைப்பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.
நேற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து 105 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,209 கனஅடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. அணையிலிருந்து நேற்று ஆயிரத்து 899 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நீர்திறப்பு 2 ஆயிரத்து 99 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 558 கனஅடி உள்ளது.
மேலும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.