சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம், அனகாபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 496 லேப்டாப்புகளை மாதம் ரூ.21 லட்சம் வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஒரு சில மாதங்கள் மட்டுமே வாடகை கொடுத்துவிட்டு, பின்னர் வாடகை தரவில்லை.
பல லேப்டாப்புகளை விற்பனையும் செய்துள்ளார். அவை பிரேமலதா நிறுவனத்திற்கே திரும்பி வந்தபோதுதான் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் கதறியுள்ளார் பிரேமலதா.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தினேஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. கிரெடிட் கார்டு பயன்படுத்தியதால், லட்சக்கணக்கில் கடனாளி ஆனதாகவும், அதை சரிகட்ட மேலும் கடன் வாங்கியதால், மேலும் கடன் அதிகரித்துவிட்டது என்றும், இதை சமாளிக்கவே, வாடகைக்கு எடுத்த லேப்டாப்புகளை விற்பனை செய்து, தனது கடனை அடைத்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனிடையே, சென்னை அடுத்துள்ள சேலையூரில் உள்ள மற்றொரு லேப்டாப் நிறுவனத்திடம் இருந்து சுமார் 700 லேப்டாப்புகளை வாங்கி விற்பனை செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக, வாடகைக்கு லேப்டாப் கொடுக்கும் நிறுவனங்கள், மாத கணக்கில் எந்தவித கேள்வியும் கேட்பதில்லை என்பதால் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.