மாலத்தீவு மக்களின் நலனுக்காக அந்நாட்டில் இந்திய இராணுவத்தினா் தொடா்ந்து செயல்படுவதற்கான நடைமுறை சாத்தியம் குறித்து இரு நாட்டு தலைவா்களும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலத்தீவு அதிபராக நவம்பர் 19ஆம் தேதி பதவியேற்ற முகமது மூயிஸை மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு சந்தித்துப் பேசினார்.
அப்போது, மருத்துவம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக மாலத்தீவில் உள்ள இராணுவ வீரர்கள் விமானத்தை இயக்குவது குறித்து கூட்டத்தில் முய்ஸு எடுத்துரைத்ததாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப்பொருள் கடத்தலைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதில் அவர்களின் பங்கை அவர் பாராட்டினார்.
மாலத்தீவு மக்களின் நலனுக்காக அந்நாட்டில் இந்திய இராணுவத்தினா் தொடா்ந்து செயல்பட, நடைமுறை சாத்தியமான தீா்வைக் காண இரு நாட்டு தலைவா்களும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ‘மாலத்தீவில் இருந்து இந்திய இராணுவத்தை இந்தியா திரும்பப் பெற இந்தச் சந்திப்பின்போது அதிபா் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் வாக்குறுதியாக அளித்திருந்தார். 2013 முதல் 2018 வரையில் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டாா்.
அதன்பிறகு இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிபா் முகமது சோலியை முகமது மூயிஸ் தற்போதைய தோ்தலில் தோற்கடித்து அதிபராகி உள்ளாா். அப்துல்லா யாமீனின் நெருங்கிய ஆதரவாளர் முகமது மூயிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.